நம்முடைய சொல்லோ, எழுத்தோ, செயலோ உயிர்களின் உயர்வுக்கானதாக இருக்க வேண்டும்! " https://veettutamil.blogspot.com/ "
வெள்ளி, 31 மே, 2024
இயற்கை வளம் காப்போம். தொடர்...
வெள்ளி, 26 ஏப்ரல், 2024
நோட்டாவுக்கு பெரும்பான்மை கிடைத்தால் மீண்டும் தேர்தல் நடத்தக் கோரிய மனு மீது SC நோட்டீஸ் அனுப்பியது.
மேலும் நோட்டாவை விட குறைவான வாக்குகள் பெறும் வேட்பாளர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட தடை விதிக்கப்படும் என்ற விதிகளை உருவாக்கவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
நோட்டா (மேற்கூறியவை எதுவும்) பெரும்பான்மையைப் பெற்றால், குறிப்பிட்ட தொகுதியில் நடத்தப்பட்ட தேர்தல் செல்லாது என அறிவிக்கப்படுவதற்கான விதிகளை உருவாக்க உத்தரவிடக் கோரிய மனு மீது இந்திய தேர்தல் ஆணையத்திற்கு (இசிஐ) உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வெற்றிடமானது மற்றும் புதிய தேர்தல் தொகுதிக்கு நடத்தப்படும் என்று செய்தி நிறுவனம் ஏஎன்ஐ அறிவித்துள்ளது.
![]() |
நோட்டாவை விட குறைவான வாக்குகளைப் பெறும் வேட்பாளர்கள் ஐந்தாண்டு காலத்திற்கு அனைத்துத் தேர்தல்களிலும் போட்டியிடுவதிலிருந்து தடை செய்யப்படுவார்கள் என்றும் நோட்டாவை "கற்பனையான வேட்பாளராக" முறையான மற்றும் திறமையான அறிக்கையிடல்/வெளியீடு செய்வதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அந்த மனுவில் விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில், ஒரு வாக்காளர் ஒரு குறிப்பிட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தனது ஆதரவை வழங்க விரும்பினால், அவர்கள் நோட்டாவைத் தேர்ந்தெடுக்க விருப்பம் உள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் (EVM) பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து வேட்பாளர்களையும் நிராகரிக்கும் அதிகாரத்தை இந்த விருப்பம் வாக்காளர்களுக்கு வழங்குகிறது.
புதன், 24 ஏப்ரல், 2024
பஞ்சகவ்யம் செய்முறை
பஞ்சகவ்யம் செய்முறை
தேவையான பொருட்கள்
நாட்டு மாட்டு சாணம் 10 kg
நாட்டு மாட்டு நெய் 1/4 லிட்டர்
நாட்டு சர்க்கரை 1 kg
தயிர் 6 லிட்டர்
பால் 6 லிட்டர்
கோமியம் 10 லிட்டர்
கற்றாழை ஜெயநீர் (கற்றாழை + கடுக்காய்) 2 லிட்டர்
வாழைப்பழம் 2 டஜன்
கரும்புச்சாறு (அ)பனங்கள் 4 லிட்டர்
செய்முறை
முதலில் நாட்டு மாட்டு சாணம் 10 kg மற்றும் நாட்டு சக்கரை 1kg உடன் 1/4 லிட்டர் நாட்டு மாட்டு நெய்யை கலந்து பிசைந்து உருண்டைகளாக பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும். இதை தயிர் 6 லிட்டர் உடன் குரு மருந்து கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
மூன்று நாட்களுக்குப் பிறகு நாட்டு மாட்டு சாண உருண்டைகளுடன் குரு மருந்து கலந்த தயிர், பால் ஆறு லிட்டர், கோமியம் 10 லிட்டர், கற்றாழை ஜெய நீர் 2 லிட்டர் மற்றும் இரண்டு டஜன் நன்கு பிசைந்த வாழைப்பழ கூழ் இளநீர் 4 லிட்டர் கரும்புச்சாறு அல்லது பனங்கள் நான்கு லிட்டர் ஆகியவற்றை நன்றாக கலந்து 21 நாட்கள் அப்படியே வைத்து விட வேண்டும். இவற்றை வைப்பதற்கு உலோகப் பாத்திரம் உபயோகப்படுத்தக் கூடாது. மாற்றாக பிளாஸ்டிக் ட்ரம் பயன்படுத்த வேண்டும்.
மேற்கண்ட அனைத்து பொருட்களையும் நன்றாக கலந்து பிளாஸ்டிக் ட்ரம்மின் வாய்ப்பகுதியை ஒரு காட்டன் துணியால் மூடி வைக்க வேண்டும். (டிரம்மின் பிலாஸ்டிக் மூடியை பயன்படுத்தக் கூடாது) தினசரி இரண்டு வேலை ஒரு மூங்கில் குச்சியை கொண்டு நன்கு கலக்கி விட வேண்டும். அவ்வாறு கலக்கிவிட பயன்படுத்திய மூங்கில் குச்சியை சுத்தமாக கழுவி வைக்க வேண்டும்.
மேற்கண்ட கரைசலை தினமும் இரு வேலையும் 60 முறை வலப்புறம் மட்டுமே கலக்க வேண்டும். இடப்புறம் கலக்கக்கூடாது. 21 நாட்களுக்குப் பிறகு இந்த கரைசல் முழுமையாக தயாராகிய பிறகு உபயோகப்படுத்த தொடங்கலாம்.
முக்கிய குறிப்பு:
ஜெய நீர் என்று சொல்லக்கூடிய கற்றாழை ஜெய நீரை தயாரிக்கும் முறை.
தோல் பகுதியை நீக்கி விட்டு 2 கிலோ அளவு சோற்றுக் கற்றாழையின் ஜெல்லை மட்டும் எடுத்து மூன்று நான்கு முறை நன்றாக கழுவி பிளாஸ்டிக் டிரம்மில் வைத்துக் கொள்ளவும். இதனுடன் 200 கிராம் அளவு கடுக்காய் தூள் கலந்து நான்கு மணி நேரம் அப்படியே வைத்து விட அதிலிருந்து நீர் மட்டும் தனியாக பிரிந்து வரும். இந்த நீரே கற்றாழை ஜெய நீர்.
இந்தக் கற்றாழை ஜெய நீரை 2 லிட்டர் அளவு பஞ்சகவ்வியத்துடன் சேர்க்க வேண்டும்.
நன்றி வணக்கம்.
செவ்வாய், 23 ஏப்ரல், 2024
நம் பண்டைய விவசாயப் பழமொழிகள்
முன்னோர்களின் வாழ்வியலில் தொடர்ந்து பழக்க வழக்கத்தில் உள்ள பழமொழிகள் இதை நாம் பயன்படுத்தினால் பாதி இயற்கை வாழ்வுகளுக்கு திரும்பியதாக அர்த்தம். இதோ உங்களுக்காக...
நம் பண்டைய விவசாயப் பழமொழிகள்...
🌝 தவளை கத்தினால் மழை
🌝 அந்தி ஈசல் பூத்தால்
அடை மழைக்கு அச்சாராம்
🌝 தும்பி பறந்தால் தூரத்தில் மழை
🌝 எறும்பு ஏறில் பெரும் புயல்
🌝 மார்கழி மழை மண்ணுக்கு உதவாது
🌝 தை மழை நெய் மழை
🌝 மாசிப் பனி மச்சையும் துளைக்கும்
🌝 தையும் மாசியும் வீடு மேய்த்து உறங்கு
🌝 புற்று கண்டு கிணறு வெட்டு
🌝 வெள்ளமே ஆனாலும்
பள்ளத்தே பயிர் செய்
🌝 காணி தேடினும் கரிசல் மண் தேடு
🌝 களர் கெட பிரண்டையைப் புதை
🌝 கெட்ட நிலத்துக்கு எட்டு வன்னி
கெட்ட குடும்பத்துக்கு எட்டு வெள்ளாடு
🌝 நன்னிலம் கொழுஞ்சி
நடுநிலம் கரந்தை
கடை நிலம் எருக்கு
🌝 நீரும் நிலமும் இருந்தாலும்
பருவம் பார்த்து பயிர் செய்
🌝 ஆடிப்பட்டம் பயிர் செய்
🌝 விண் பொய்த்தால் மண் பொய்க்கும்
🌝 மழையடி புஞ்சை
மதகடி நஞ்சை
🌝 களரை நம்பி கெட்டவனும் இல்லை மணலை நம்பி வாழ்ந்தவனும் இல்லை
🌝 உழவில்லாத நிலமும்
மிளகில்லாத கறியும் வழ வழ
🌝 அகல உழவதை விட
ஆழ உழுவது மேல்
🌝 புஞ்சைக்கு நாலு உழவு
நஞ்சைக்கு ஏழு உழவு
🌝 குப்பை இல்லாத வெள்ளாமை சப்பை
🌝 ஆடு பயிர் காட்டும்
ஆவாரை கதிர் கட்டும்
🌝 கூளம் பரப்பி கோமியம் சேர்
🌝 ஆற்று வண்டல் தேற்றும் பயிரை
🌝 நிலத்தில் எடுத்த பூண்டு
நிலத்தில் மடிய வேண்டும்
🌝 காய்ச்சலும் பாய்ச்சலும் வேண்டும்
🌝 தேங்கி கெட்டது நிலம்
தேங்காமல் கெட்டது குளம்
🌝 கோரையை கொல்ல கொள்ளுப் பயிர் விதை
🌝 சொத்தைப் போல்
விதையை பேண வேண்டும்
🌝 விதை பாதி வேலை பாதி
🌝 காய்த்த வித்திற்கு பழுது இல்லை
🌝 பாரில் போட்டாலும் பட்டத்தில் போடு
🌝 கோப்பு தப்பினால்
குப்பையும் பயிராகாது
🌝 ஆடி ஐந்தில் விதைத்த விதையும் புரட்டாசி பதினைந்தில் நட்ட நடவும் பெரியோர்கள் வைத்த தனம்
🌝 கலக்க விதைத்தால்
களஞ்சியம் நிறையும்.
அடர விதைத்தால் போர் உயரும்
வாழ்க வையகம்! வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!
எல்லா உயிர்களும் இன்பமாக வாழ்ந்தால் மட்டுமே நாம் நலமோடு வாழ இயலும்.
யாரையும் நம்பாதீர்கள்.
உழவே தலை.
தனி மனித மாற்றமே நம் சமுதாயத்தின் மாற்றம்.
கடைசி மரமும் வெட்டி உண்டு
கடைசி மரமும் விஷம் ஏறிக்
கடைசி மீனும் பிடி பட
அப்போதுதான் உறைக்கும் - இனி
பணத்தைச் சாப்பிட முடியாது என்பது!!
ஆறும் குளமும் மாசு அடைந்தால்
சோறும் நீறும் கிடைக்காது
நீர் நிலைகளை காப்போம்.
இணைவோம்.
நம் மூத்த முன்னோர் சொல்மிக்க மந்திரமில்லை.
#VIVASAYAM
#NAMMALVAR
ஞாயிறு, 21 ஏப்ரல், 2024
யார் பெரியவர் ? வான் குருவியின் கூடு ! ஔவையார் பாடல்.
ஔவையார் பாடல் - வான் குருவியின் கூடு !
சந்தி பிரித்து எழுதிய பாடல்
"வான் குருவியின் கூடு வல் அரக்கு தொல் கரையான்
தேன் சிலம்பி யாவர்க்கும் செய் அரிதால் - யாம் பெரிதும்
வல்லோமே என்று வலிமை சொல வேண்டாம் காண் !
எல்லார்க்கும் ஒவ்வொன்று எளிது !"
பொருளுரை:
வான் குருவி எனப்படும் தூக்கணாங் குருவிக்கூடு, அரக்கு எனப் படும் வலிமையான இயற்கைப் பசை, தேன்அடை, சிந்தனைச் சிக்கலை நம்முள் உருவாக்கிவிடும் சிலந்தி வலை இவற்றை மேலோட்டமாகப் பார்த்தால் புல்லிய புலனங்களே ! ஆனால் இந்த அறிவியல் உலகில் எந்த மேதையாலும் இவற்றை உருவாக்க இயலுமா?
ஒவ்வொருவரிடமும் ஒரு சிறப்பு இருக்கிறது; சாதாரண பறவையான வான் குருவி கட்டுகின்ற (தூக்கணாங் குருவிக்) கூட்டை இந்தக் கணினி யுகத்தில் வேறு எவராலும் கட்டித் தொங்கவிட்டு அதில் அக் குருவிகளைக் குடி வைக்க முடியுமா? முடியவே முடியாது !
அதாவது இந்த உலகத்தில் ஆற்றிவு படைத்த மனிதர்களாலும் செய்ய முடியாத செயல்களும் இருக்கவே செய்கின்றன என்பதை இடித்துக் காட்டி, வாழ்வில் பிற மனிதர்களிடத்தும், பிற உயிர்களிடத்தும் நாம் சமத்துவ உணர்வு கொண்டிருக்க வேண்டும் என்பதை எடுத்துக் காட்டுவதே இப்பாடலின் நோக்கம் !
‘யாம் பெரிய வல்லாளன்’ என்பதாய் எண்ணம் கொண்டு பிறரைத் தாழ்மையாக நினைத்து விடக் கூடாது’ என்ற எச்சரிக்கையை இப்பாடல் மூலம் நமக்கு அளிக்கிறார் ஔவையார் !
"அவரவர் தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ப ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு மனிதனும் பெரியவர்"
பூமியில் படைக்கப்பட்ட எல்லோருக்கும் தனித்திறமை உண்டு என்று உத்வேகத்தோடு செயல்படு என்கிறார் நமது பாட்டி.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
வெள்ளி, 8 மார்ச், 2024
சேதுக்கரை - மராட்டியர்கள் போர்- ராணி முத்துத்திருவாயி நாச்சியார்
சேதுக்கரை - மராட்டியர்கள் போர் :
"மகளிர் தினத்தில் தெரிந்து கொள்ள வேண்டியது."
ஐம்பதாயிரம் சிப்பாய்கள்..நான்காயிரம் குதிரை படை வீரர்கள் கொண்ட தஞ்சை மராட்டிய #துல்ஜாஜியின் படைகள் படையெடுத்து வருகிறார்கள்.. அதுவும் உளவு சொல்ல உள்நாட்டு சதிகாரர் மாப்பிள்ளைதேவர் மற்றும் அவன் தம்பி உதவியுடன் எதிரி படை வருகிறது..
நாட்டின் நிலைமையோ..
மன்னரை இழந்து வாடும் பனிரெண்டு வயதே ஆன மகன் முத்துராமலிங்க சேதுபதி மன்னராக..
தலைவன் இல்லாத நாடாக தத்தளிக்கிறது..
துல் ஜாஜியின் படைகள் முதலில் முதுவார் நத்தம் கோட்டையை தாக்குகிறது..
அவர்களை தடுத்து நிறுத்த தொன்னுற்று ஆறு மறவர்கள் உயிரை கொடுத்தனர்.. மறவர் படை ஆறுமுககோட்டைக்கு பின் வாங்குகிறது..
சுந்தர பாண்டியன் பட்டணம் (SP பட்டணம்).. ஓரியூர்.. கண்ணன்குடி..மங்களக்குடி.. கொண்ட வனந்தான்.. அனுமனந்தன்குடி போன்ற நிலைகளை எளிதில் வீழ்த்தி முன்னேறியது தஞ்சை படை..
அடுத்து ஆறுமுககோட்டை தான்.. இதை கைப்பற்றி விட்டால் இருபதே மைல் கல் தான் ராமநாதபுரம் அரணமனை.. அந்த கோட்டையும் 19.02.1771 ல் வீழ்ந்தது..
ஏழு ஆண்டுகளுக்கு முன் மறவர்களால் உதவி பெற்ற நவாப்பும் கூட எந்த உதவிக்கும் முன் வரவில்லை..
ராமநாதபுரம் கோட்டை முற்றுகையிடப்பட்டது..
நாற்பது நாட்கள் கோட்டை முற்றுகை..
ஒருவேளை கோட்டைக்குள் எதிரிகள் புகுந்தால் மறவர் பெண்கள் எதிரிகள் கைகளில் சிக்காமல் இருக்க கூட்டமாக #சதி (#ஜவுகர்)எனபடும் தீபாய்தல் ஏற்பாடு செய்ய பட்டிருந்தது..(#பத்மாவதி படம் நியாபகம் வந்தால் நான் பொறுப்பல்ல)..
ராணி இந்த இக்கட்டான சூழலில் நாட்டை காக்க ஒரு காரியம் செய்தார்.. ஆம்.. ராமநாதபுரம் அரண்மனையின் வடக்கே முற்றுகையிட்ட எதிரிகளின் பாசறையை ஒரே நாளில் தூள் தூளாக்கினார்.. எப்படி..?
ராமநாதபுரம் பெரிய கண்மாயில் முழுப்பெருக்கு ஏற்பட்டு நீர் காணப்பட்டது.. இதை தனது வீரர்களால் அதிகாலை பொழுதில் வெடி வைத்து தகர்த்தார்..இதில் எதிரி நாட்டு படையின் பல ஆயிரம் வீரர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லபட்டனர்..(#பாகுபலி படம் நியாபகம் வந்தால் நான் பொறுப்பல்ல)..
பெரும் படையை இழந்து வேறு வழி இல்லாமல் மராட்டிய மன்னன் #துல்ஜாஜி சமாதானம் செய்து கொண்டு தன் நாடு நோக்கி திரும்பினான்..
மறவர் சீமையில் வீரம் என்பது ஆண்களுக்கு மட்டும் அல்ல.. நாச்சியார்களுக்கும் தான்..
ராணி. #முத்து_திருவாயி_நாச்சியார்..
குறிப்பு : ராணி வேலுநாச்சியார்க்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்பே எதிரிகளை ஓட விட்டவர்..
சனி, 19 ஆகஸ்ட், 2023
பூலித் தேவர் வரலாறு
பூலித் தேவர்
"பூழி நாடு என்பது பாண்டிய நாட்டில் அமைந்த அகநாடுகளுள் ஒன்று. சங்ககாலம் தொட்டே இருந்து பாண்டியர் ஆட்சியின் கீழ் வரும் இந்நாடு 1378ஆம் ஆண்டு சேர நாட்டில் இருந்த ஒரு பாண்டிய மன்னனால் வரகுண ராமன் சிந்தாமணி காத்தப்ப பூழித்தேவர் என்ற தளபதிக்குத் தானமாக வழங்கப்பட்டது. இவர் ஆப்பநாட்டுக் கொண்டையங்கோட்டை மறவர் வழியில் வந்தவராவார். ஆரம்ப காலத்தில் இதன் தலைநகரம் ஆவுடையாபுரம். நாயக்கர் காலத்தில் (1529–64) பாண்டி நாடு 72 பாளையங்களாக பிரிக்கப்பட்ட போது, பூழி நாட்டின் பகுதிகள் அதனுள் அடங்கின. அதன் பிறகு சில ஆண்டுகள் கழித்து அதன் தலைநகரம் நெற்கட்டாஞ்செவ்வலுக்கு மாற்றப்பட்டது. நாயக்கர் கால வீழ்ச்சியின் போது பாளையங்கள் சுயவுரிமை பெறத்தொடங்கின.வரகுண ராமன் சிந்தாமனி காத்தப்ப பூலித்தேவரின் வழிவந்த பத்தாம் தலைமுறை மன்னனே சித்திர புத்திரத்தேவர் என்றவர் ஆவார்"
முதல் இந்திய விடுதலை போராட்ட வீரர் பூலித்தேவர் அவர்கள் நெல்லை பகுதியில் நெற்கட்டான்செவலை தலைமை இடமாகக் கொண்டு ஆண்டு வந்த பாளையக்காரர். இந்திய நாட்டின் விடுதலை வரலாற்றில் `வெள்ளையனே வெளியேறு’ என்று முதல்முதலாக 1755 ஆம் ஆண்டிலேயே வீர முழக்கம் செய்தவர். ஆங்கிலேயருக்கு எதிராக முதல் குரல் தென்னகத்து நெல்லைச் சீமையில் இருந்து இவர் மூலமே எழுந்தது.
பெற்றோர் சித்திரபுத்திர தேவர் சிவஞான நாச்சியார். 1715 செப்.1ல் பிறந்தார் ‘காத்தப்ப பூலித் தேவர்’. சிறுவயதிலேயே வீர உணர்ச்சியும், இறையுணர்வும் மிகுந்தவர்.
தமிழ் இலக்கண, இலக்கிய நூல் கற்று கவிதை எழுதும் திறம் பெற்றார்.
பன்னிரண்டு வயதில் போர்ப் பயிற்சி பெற்று குதிரை ஏற்றம், யானை ஏற்றம், மல்யுத்தம், வாள் வீச்சு, வேல், அம்பு எய்தல், சிலம்பு வரிசைகள், கவண் எறிதல், வல்லயம் எறிதல், சுருள் பட்டா சுழற்றுதல் என அனைத்து வீர விளையாட்டுகளிலும் சிறந்து விளங்கினார்.
புலிகளுடன் விளையாடுவதிலும் புலித்தோல் புலி நகம் அணிவதிலும் பெரு விருப்பம் இருந்ததால் புலித்தேவர் என்றும் அழைத்துள்ளனர்.
அவரது பெற்றோர் காத்தப்ப பூலித்தேவரின் திறமை கண்டு பன்னிரண்டாவது வயதில் அதாவது 1726 லேயே பட்டம் சூட்டி மன்னராகினார்கள்.
பின்னர் பூலித்தேவர் மாமன் மகள் கயல்கண்ணி என்ற லட்சுமி நாச்சியாரை திருமணம் செய்தார்.அவர்களுக்கு கோமதிமுத்துத் தலவாச்சி, சித்திரபுத்திர தேவன், சிவஞான பாண்டியன் என மூன்று மக்கள் பிறந்தனர்.
பூலித்தேவர் காலத்தில்தான் நாயக்கர் ஆட்சி நலிவுற்று பிற்காலப் பாண்டியர்கள் ஆட்சி முடிவுற்று ஆற்காடு நவாப்பின் அத்துமீறல்கள் தொடங்கியிருந்தன. ஆங்கிலேயர் வருகையால் சிறிய பாளையக்காரர்களுக்கு ஆபத்து ஏற்பட்டிருந்தது.
அதனால் அனைத்து பாளையக்காரர்களையும் ஒன்றுகூட்டி பாளையக்காரர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தினார் பூலித்தேவர்.அவர் திட்டப்படி அனைத்து பாளையக்காரர்களும் நாயக்கராட்சிக்குக் கப்பம் கட்டுவதைத் தவிர்த்தனர்.
ஆற்காடு நவாப் மற்றும் ஆங்கிலேயர் இடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி வரி வசூலிக்கும் உரிமையை ஆங்கிலேயரிடம் ஒப்படைத்தார் ஆற்காடு நவாப். அது முதல், ஆங்கிலேயர்கள் இந்திய மன்னர்களுடன் நேரடியாகப் போரிடத் தொடங்கினர்.
மாபூஸ்கான், கர்னல் ஹெரான் இருவரும் சேர்ந்து பூலித்தேவரின் கோட்டையை முற்றுகையிட்டனர். ஆங்கிலேயர் வசம் வெடிமருந்துகளும், துப்பாக்கிகளும், பீரங்கிகளும் இருந்தன. இருந்தும் பூலித்தேவரின் கோட்டையில் சிறு விரிசலைக் கூட ஏற்படுத்த முடியவில்லை. மாறாக ஆங்கிலேயரின் தளவாடங்களும் உணவும் தீர்ந்தது. அதன் பின் கோட்டையை விட்டு வெளியே வந்த பூலித்தேவன் ஆங்கிலப் படைகளை சின்னாபின்னமாக்கினார். இந்த முதல் போரில் பூலித்தேவர் வெற்றி பெற்றாலும் தொடர்ந்து போர் வரும் அபாயத்தை உணர்ந்தார். மீண்டும் பாளையக்காரர்களை ஒன்றுபடுத்த முயன்றார். ஆனால் அவர்களோ, தங்கள் அரசாட்சியே போதும் என சுயநலத்துடன் ஒதுங்கினர்.
அதன்பின்னர் பூலித்தேவர் அவர்கள் பாளையக்காரர்கள் ஒன்றிணைந்த சுதேசியப்படை என்ற ஒரு புதிய படையை ஏற்படுத்தி மருதநாயகத்திடம் (யூசுப்கான்)ஒப்படைத்தனர். யூசுப் கானே பின்னாளில் , ஆங்கிலேயருடன் இணைந்து, சுதேசிப் படையைக் கொண்டே பூலித்தேவரை எதிர்த்தார்.
1755-ஆம் ஆண்டு தொடங்கி 1767-ஆம் ஆண்டு வரை பல போர்களைப் பூலித்தேவர் சந்திக்க நேர்ந்தது, பரப்பளவில் ஒரு சிறிய பாளையத்திற்கு மட்டுமே தலைவரானாலும் பூலித்தேவரால் ஆங்கிலேயர்களையும், கூலிப்படைகளையும் எதிர்த்துப் பன்னிரெண்டு ஆண்டுகள் போர் புரிய முடிந்தது.
1761-ஆம் ஆண்டு கான்சாகிபுடன் இறுதியாக நடைபெற்ற போரில் பூலித்தேவரின் படைகள் யூசுப்கான் படைகளிடம் தோற்றன. பத்தாண்டுகளாக போராடிம் வெற்றி பெற இயலாத நிலையில் இங்கிலாந்திலிருந்து தருவிக்கப்பட்ட பேய்வாய் பீரங்கிகளின் உதவியோடு பூலித்தேவரின் கோட்டையில் முதன் முதலாக உடைப்பு ஏற்படுத்தப்பட்டது.
அதற்குப்பின் ஆங்கிலேயப் படை, தளவாடங்களோடு கோட்டைக்குள் புகுந்தது. இந்நிலையில் வேறு வழியின்றி எஞ்சிய படைகளோடு பூலித்தேவர் கடலாடிக்குத் தந்திரமாகத் தப்பிச் சென்றார். அவர் கோட்டையை விட்டு சென்றாலும் ரகசியமாக படைகளைத் திரட்டும் பணியில் ஈடுபட்டார். சில மாதங்களுக்குப் பின்னர் பூலித்தேவரால் மீண்டும் கோட்டையைப் பிடித்து பாளையத்தைச் சீர்படுத்தினார்.
ஆனால் இதையறிந்த ஆங்கிலேயர் நெற்கட்டான் செவ்வல் பாளையத்தின் மன்னர் பூலித்தேவரைப் பிடிக்க ஒரு நாட்டையே வளைக்கக் கூடிய அளவுக்குப் பெரும் படையுடன் வந்தனர், இத்தகைய பெரும்படையை எதிர்பார்க்காத நிலையிலும் பூலித்தேவர் நிலைத்து நின்று போரைத் தொடர்ந்தார். ஆனால் ஆங்கிலேயப் படை பீரங்கிகளின் முன் மன்னர் படையின் வாளும் வேலும் தாக்குப்பிடிக்க முடியவில்லை.அச்சமயம் பெய்த பலத்த மழையைப் பயன்படுத்தி மன்னர் தப்பிச் சென்றார். 1767 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தப் போரே மன்னரின் கடைசிப்போர்.
மறைவு நாள் (10-08-1767)
பூலித்தேவரின் மறைவு பற்றி இரு வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.
ஒரு சாரார் கருத்துப்படி ஆரணிக் கோட்டையின் தலைவன் அனந்த நாராயணன் என்பவனின் மாளிகைக்கு பூலித்தேவரை வரச் செய்து அங்கு கைது செய்யப்பட்டார் என்றும், பாளையங்கோட்டைக்குக் கொண்டு செல்லும் வழியில், சங்கரன் கோயிலின் இறைவனை வழிபட வேண்டும் என்று பூலித்தேவர் விரும்பியதாகவும், அதன்படி கும்பினியப் போர் வீரர்கள் புடைசூழச் சென்று இறைவனை வழிபட்டதாகவும் , அப்போது பெரிய புகை மண்டலமும் சோதியும் கைவிலங்குகள் அறுந்து விழ சோதியில் கலந்தார் என்றும், பூலித்தேவன் சிவஞானத்துடன் ஐக்கியமானதால் "பூலி
சிவஞானம்" ஆனார் என்றும் நாட்டுப்புறப் பாடல்கள் கூறுகின்றன.தமிழ்நாடு அரசு திருநெல்வேலி மாவட்டம் சிவகிரி வட்டம் பகுதியிலுள்ள நெல்கட்டும்செவல் எனும் ஊரில் பூலித்தேவன் நினைவைப் போற்றும் வகையில் பூலித்தேவன் நினைவு மாளிகை, திருமண மண்டபம் ஆகியவற்றை அமைத்துள்ளது. இந்த நினைவு மாளிகையின் முகப்பில் பூலித்தேவன் முழு அளவு திருஉருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு ஆயிரம் பேர் அமரக்கூடிய அளவில் திருமண மண்டபம் கட்டப்பட்டுள்ளது. பூலித்தேவன் காலத்து நினைவுச் சின்னங்கள் மற்றும் ஆயுதங்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரம்பிள்ளை
தியாக செம்மல் வ.உ.சி
வ.உ.சி என்றழைக்கப்படும் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை
கப்பலோட்டிய தமிழன் வ உ சியின் சுதேசி கப்பல் என்னாச்சு... யாரும் சொன்னார்களா? நான் சொல்கிறேன்.
வ.உ.சி. அவர்கள் வாங்கிய எஸ்.எஸ்.காலியா, எஸ்.எஸ். லாவோ கப்பல்களில் 42 முதல் வகுப்புகள், 24 இரண்டாம் வகுப்புகள், 1300 சாதாரண வகுப்புகள் என மொத்தம் 1366 இருக்கைகளும், 4000 டன் சரக்கு மூட்டைகள் ஏற்றும் வசதிகளுடன் இருந்தது.
தூத்துக்குடியில் இருந்து கொழும்புவிற்கு 4 அணா கட்டணம் மட்டுமே சுதேசி கப்பலில் வசூலிக்கப் பட்டது.
ஆனால் ஆங்கிலக் கம்பெனியோ 4 ரூபாய் வசூலித்தது. மேலும் சரக்கு மூட்டைகளுக்கும், லக்கேஜூக்கும் தனிக்கட்டணமும் வசூலித்தது.
கட்டணம் மிகக் குறைவாக இருந்ததாலும், சுதேசிக் கப்பல் என்றும் மக்கள் கருதியால் சுதேசிக் கப்பலுக்கு மகத்தான ஆதரவளித்தனர்.
நட்டத்தில் மூழ்கிய ஆங்கிலக் கப்பல் தனது கட்டணத்தை 1 ரூபாயாகவும், பின்னர் 4 அணாவாகவும், குறைத்த பிறகும் கூட்டம் வராததால் #கட்டணமின்றி ஏற்றிச் செல்வதாக அறிவித்தது. அப்பொழுதும் மக்கள் ஆதரவு இல்லாததால் வ வு சியை வளைக்கத் திட்டமிட்டது ஆங்கில கம்பெனி.
கடைசியில் வ உ சிக்கு ஒரு லட்சம் #லஞ்சம் தருவதாக பேரம் பேசிப் பார்த்தது. இதற்கும் மடியாததால் பழி தீர்க்க முடிவு செய்தது.
இந்த நேரத்தில் வங்க மாநிலத்தின் முடிசூடா மன்னனாக திகழ்ந்த பிபின்_சந்திரபாலரின் விடுதலையை கொண்டாட
இந்தியா முழுவதும் மட்டுமின்றி தமிழகத்திலும் வெள்ளை அரசு தடை விதித்து இருந்தது.
ஆனாலும் விடுதலை நாளான 09.03.1908ம் தேதியில் தூத்துக்குடியில் சுமார் 20000 மக்கள் கூடிய பொதுக்கூட்டத்தில் சுப்பிரமணிய_சிவாவுடன், வ.உ.சி பேசினார்.
இதற்காக காத்திருந்த வெள்ளை அரசு, உடனடியாக தடையை மீறிய குற்றத்திற்காக மாவட்ட ஆட்சியர் விஞ்ச் என்பவரை நேரில் சந்திக்க பணித்தது. இதன்படி 12.03.1908 அன்று நேரில் சந்தித்தார்.
அப்போது,
1. அனுமதியின்றி கூட்டத்தில் பேசியது,
2. மக்களை வந்தேமாதரம் கோசமிட தூண்டியது,
3. ஆங்கிலேயருக்கு எதிராக கப்பல் ஓட்டுவது குற்றம் என கண்டித்து நன்னடத்தை சான்றிதழ் கொடுத்து வெளியில் செல்ல ஆணையிட்டது.
இதனை கடுமையாக கண்டித்த வ உ சிக்கும், சுப்பிரமணிய சிவாவுக்கும், பத்மநாப அய்யருக்கும் 109, 124ஏ பிரிவுகளில் வழக்குப் போட்டு 26.03.1908ல் பாளையங்கோட்டை #சிறையில் உடனடியாக அடைத்தது.
ஏனெனில் சுதேசி கப்பல் ஓராண்டு புள்ளி விவரப்படி லாவோ கப்பல் 115 பயணங்களில் 29773 பேர் பயணித்தாகவும், காலியா கப்பல் 22 பயணங்களில் 2150 பேர் பயணித்தாகவும் கூறிய கணிப்புதான்.
பெரும் இலாபத்துடன் இயங்கிய சுதேசி கப்பலை முடக்க 24.07.1908 அன்று நடுக்கடலில் வேறொரு கப்பலில் மோதிய வழக்கை கையில் எடுத்தது. இதனால் சுதேசி கப்பல் நிர்வாகிகள் அச்சமடைந்தனர்.
திடீரென்று விசாரணை முடிவில் கப்பல் தலைமை அதிகாரி அலெக்ஸ் ஃபிளிட் விடுதலை செய்யப்பட்டார்.
இதற்குள் ஓர் இரகசியம்ஒளிந்து இருந்தது.
வ உ சி சிறையில் இருந்த போது சுதேசி நிர்வாகிகள் பயந்து போட்டியை சமாளிக்க முடியவில்லை என்றதோடு நிற்காமல் சிலர் ராஜினாமா செய்து ஓடினர்.
அதோடு மட்டுமில்லாமல் இரண்டு கப்பலையும் விற்றுவிட்டனர். இதில் கேவலம் என்னவென்றால் எஸ்.எஸ்.காலியா கப்பலைவெள்ளையருக்கேவிற்றுவிட்டது தான்.
இதனை அறிந்த வ உ சி...
"" மானம் பெரிதென கருதாமல், கூட இருந்த பாவிகளே அற்ப காசுக்காக வெள்ளையனிடமே விற்று விட்டீர்களே, அதைவிட அந்தக் கப்பலை சுக்கல் சுக்கலாக நொறுக்கி வங்கக் கடலில் வீசியிருக்கலாம் "" என குமுறினார்.
பெற்ற மகன் செத்துக் கிடந்த போதும், கட்டிய மனைவி கவலைக்கிடமாக இருந்த போதும் நாட்டின் விடுதலைக்காக வாங்கிய கப்பலை #வெள்ளையனிடமே_விற்றதை எண்ணி நொந்து உள்ளம் நொறுங்கிப் போனார்
வ உ சி.
நாட்டிற்காக குடும்பத்தையும், சொத்துக்களையும் இழந்த தியாகிகளை கொண்டாடாமல், வேசதாரிகளையும், பதவிப் பித்தர்களையும் தேசத் தலைவர்களாக கொண்டாடுவது கேவலத்திலும் கேவலம்.
ஓங்கட்டும் வ.உ.சி புகழ்.
ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2023
உண்மையை நீ தேடு - கவிதை
கனிமவளக் கொள்ளை
"உண்மையை நீ தேடு"
நாடு நல்ல நாடு
நம்மளோட நாடு
நல்லபடி வாழணுமா
உண்மையை நீ தேடு!
பார்ப்பதற்கு
பசுமையானால்
பயிராகுமா!
படங்களிலே
பழம் இருந்தால்
பசிக்காகுமா!
பண்புகெட்டவன்
பதவி ஏறினால்
நீதி கிடைக்குமா!
வாழ்க வாழ்க
என்று சொன்னால்
வறுமை ஒழியுமா!
களவுபோன
மலைகள் தான்
காட்சி கொடுக்குமா!
காடு மலையை
காக்காதது
அரசாகுமா!
அதை கண்டுக்காமல்
கடப்பவன்
மனிதன் ஆகுமா
பக்தன் வேடம்
போட்டு விட்டால்
பக்தியாகுமா!
தேசபக்தன் என
சொல்லி விட்டால்
தேசம் வளருமா!
தெருவுக்கெல்லாம்
தேசத் தலைவர்
பெயர் வேண்டுமா
தேம்பி அழும்
குழந்தைக்கு சோறு
வேண்டாமா!!
அவள் நினைவே சுகமாகும் - கவிதை
அவள் நினைவே சுகமாகும்
பூ ஒன்னு அங்கு இருக்க
தேன் வந்து இங்கு சுரக்க
நித்திரையில் தேன் குடிக்க
உன் நினைவில் நான் துடிக்க
சொப்பனத்தில் வந்தவளே
சொக்குப்பொடி போட்டியடி
சொர்க்கமே நீ தானு
சொல்லாமல் சொன்னியேடி
பெண்ணழகு எல்லாம்
உன் வடிவில் கண்டேனே
பேச மொழியின்றி
பேதையாக சென்றேனே - உன்
அழகுக்கு முன்னாடி
அடிமையாகி நின்றேனே
ஆராயப்படாத வாழ்க்கை – திருக்குறள் மக்களுக்கு வழங்கும் பாடம்
மனித வாழ்க்கையின் குறிக்கோள் என்ன? நம்முடைய வாழ்வு எதற்காக? வாழ்க்கையை நாம் எப்படி நடத்த வேண்டும்? இவை எல்லாம் யுகங்களாக மனிதர்கள் ஆராய்ந...
-
பூலித் தேவர் "பூழி நாடு என்பது பாண்டிய நாட்டில் அமைந்த அகநாடுகளுள் ஒன்று. சங்ககாலம் தொட்டே இருந்து பாண்டியர் ஆட்சியின் கீழ் வரும் இ...
-
தீராத நோய் தீர்க்கும் ஞான மூலிகை - #கரிசலாங்கண்ணி சித்தர்களின் செல்ல பிள்ளையான இராமலிங்க அடிகளார் என்று அழைக்கப்படும் வள்ளலார். மிகவும் முத...
-
" சிங்கம் காட்டுக்கு ராஜாவாக உருவான கதை" மிருகங்களை வைத்து வித்தை காட்டும் இடத்திலிருந்து தன் 5...


