சனி, 19 ஆகஸ்ட், 2023

பூலித் தேவர் வரலாறு

பூலித் தேவர் 

"பூழி நாடு என்பது பாண்டிய நாட்டில் அமைந்த அகநாடுகளுள் ஒன்று. சங்ககாலம் தொட்டே இருந்து பாண்டியர் ஆட்சியின் கீழ் வரும் இந்நாடு 1378ஆம் ஆண்டு சேர நாட்டில் இருந்த ஒரு பாண்டிய மன்னனால் வரகுண ராமன் சிந்தாமணி காத்தப்ப பூழித்தேவர் என்ற தளபதிக்குத் தானமாக வழங்கப்பட்டது. இவர் ஆப்பநாட்டுக் கொண்டையங்கோட்டை மறவர் வழியில் வந்தவராவார். ஆரம்ப காலத்தில் இதன் தலைநகரம் ஆவுடையாபுரம். நாயக்கர் காலத்தில் (1529–64) பாண்டி நாடு 72 பாளையங்களாக பிரிக்கப்பட்ட போது, பூழி நாட்டின் பகுதிகள் அதனுள் அடங்கின. அதன் பிறகு சில ஆண்டுகள் கழித்து அதன் தலைநகரம் நெற்கட்டாஞ்செவ்வலுக்கு மாற்றப்பட்டது. நாயக்கர் கால வீழ்ச்சியின் போது பாளையங்கள் சுயவுரிமை பெறத்தொடங்கின.வரகுண ராமன் சிந்தாமனி காத்தப்ப பூலித்தேவரின் வழிவந்த பத்தாம் தலைமுறை மன்னனே சித்திர புத்திரத்தேவர் என்றவர் ஆவார்" 


 முதல் இந்திய விடுதலை போராட்ட வீரர் பூலித்தேவர் அவர்கள் நெல்லை பகுதியில் நெற்கட்டான்செவலை தலைமை இடமாகக் கொண்டு ஆண்டு வந்த பாளையக்காரர். இந்திய நாட்டின் விடுதலை வரலாற்றில் `வெள்ளையனே வெளியேறு’ என்று முதல்முதலாக 1755 ஆம் ஆண்டிலேயே வீர முழக்கம் செய்தவர். ஆங்கிலேயருக்கு எதிராக முதல் குரல் தென்னகத்து நெல்லைச் சீமையில் இருந்து இவர் மூலமே எழுந்தது.


பெற்றோர் சித்திரபுத்திர தேவர் சிவஞான நாச்சியார். 1715 செப்.1ல் பிறந்தார் ‘காத்தப்ப பூலித் தேவர்’. சிறுவயதிலேயே வீர உணர்ச்சியும், இறையுணர்வும் மிகுந்தவர். 


தமிழ் இலக்கண, இலக்கிய நூல் கற்று கவிதை எழுதும் திறம் பெற்றார்.


பன்னிரண்டு வயதில் போர்ப் பயிற்சி பெற்று  குதிரை ஏற்றம், யானை ஏற்றம், மல்யுத்தம், வாள் வீச்சு, வேல், அம்பு எய்தல், சிலம்பு வரிசைகள், கவண் எறிதல், வல்லயம் எறிதல், சுருள் பட்டா சுழற்றுதல் என அனைத்து வீர விளையாட்டுகளிலும் சிறந்து விளங்கினார்.


புலிகளுடன் விளையாடுவதிலும் புலித்தோல் புலி நகம் அணிவதிலும் பெரு விருப்பம் இருந்ததால் புலித்தேவர் என்றும் அழைத்துள்ளனர். 


அவரது பெற்றோர் காத்தப்ப பூலித்தேவரின் திறமை கண்டு பன்னிரண்டாவது வயதில் அதாவது 1726 லேயே பட்டம் சூட்டி மன்னராகினார்கள்.


பின்னர் பூலித்தேவர் மாமன் மகள் கயல்கண்ணி என்ற லட்சுமி நாச்சியாரை  திருமணம் செய்தார்.அவர்களுக்கு கோமதிமுத்துத் தலவாச்சி, சித்திரபுத்திர தேவன், சிவஞான பாண்டியன் என மூன்று மக்கள் பிறந்தனர்.


பூலித்தேவர் காலத்தில்தான் நாயக்கர் ஆட்சி நலிவுற்று பிற்காலப் பாண்டியர்கள் ஆட்சி முடிவுற்று ஆற்காடு நவாப்பின் அத்துமீறல்கள் தொடங்கியிருந்தன. ஆங்கிலேயர் வருகையால் சிறிய பாளையக்காரர்களுக்கு ஆபத்து ஏற்பட்டிருந்தது. 


அதனால் அனைத்து பாளையக்காரர்களையும் ஒன்றுகூட்டி பாளையக்காரர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தினார் பூலித்தேவர்.அவர் திட்டப்படி அனைத்து பாளையக்காரர்களும் நாயக்கராட்சிக்குக் கப்பம் கட்டுவதைத் தவிர்த்தனர்.


ஆற்காடு நவாப் மற்றும் ஆங்கிலேயர் இடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி வரி வசூலிக்கும் உரிமையை ஆங்கிலேயரிடம் ஒப்படைத்தார் ஆற்காடு நவாப். அது முதல், ஆங்கிலேயர்கள் இந்திய மன்னர்களுடன் நேரடியாகப் போரிடத் தொடங்கினர்.

மாபூஸ்கான், கர்னல் ஹெரான் இருவரும் சேர்ந்து பூலித்தேவரின் கோட்டையை முற்றுகையிட்டனர். ஆங்கிலேயர் வசம் வெடிமருந்துகளும், துப்பாக்கிகளும், பீரங்கிகளும் இருந்தன. இருந்தும் பூலித்தேவரின் கோட்டையில் சிறு விரிசலைக் கூட ஏற்படுத்த முடியவில்லை. மாறாக ஆங்கிலேயரின் தளவாடங்களும் உணவும் தீர்ந்தது. அதன் பின் கோட்டையை விட்டு வெளியே வந்த பூலித்தேவன் ஆங்கிலப் படைகளை சின்னாபின்னமாக்கினார். இந்த முதல் போரில் பூலித்தேவர் வெற்றி பெற்றாலும் தொடர்ந்து போர் வரும் அபாயத்தை உணர்ந்தார். மீண்டும் பாளையக்காரர்களை ஒன்றுபடுத்த முயன்றார். ஆனால் அவர்களோ, தங்கள் அரசாட்சியே போதும் என சுயநலத்துடன் ஒதுங்கினர்.

அதன்பின்னர் பூலித்தேவர் அவர்கள் பாளையக்காரர்கள் ஒன்றிணைந்த சுதேசியப்படை என்ற ஒரு புதிய படையை ஏற்படுத்தி மருதநாயகத்திடம் (யூசுப்கான்)ஒப்படைத்தனர். யூசுப் கானே பின்னாளில் , ஆங்கிலேயருடன் இணைந்து, சுதேசிப் படையைக் கொண்டே பூலித்தேவரை எதிர்த்தார்.


1755-ஆம் ஆண்டு தொடங்கி 1767-ஆம் ஆண்டு வரை பல போர்களைப் பூலித்தேவர் சந்திக்க நேர்ந்தது, பரப்பளவில் ஒரு சிறிய பாளையத்திற்கு மட்டுமே தலைவரானாலும் பூலித்தேவரால் ஆங்கிலேயர்களையும், கூலிப்படைகளையும் எதிர்த்துப் பன்னிரெண்டு ஆண்டுகள் போர் புரிய முடிந்தது. 

1761-ஆம் ஆண்டு கான்சாகிபுடன் இறுதியாக நடைபெற்ற போரில் பூலித்தேவரின் படைகள் யூசுப்கான் படைகளிடம் தோற்றன. பத்தாண்டுகளாக போராடிம் வெற்றி பெற இயலாத நிலையில் இங்கிலாந்திலிருந்து தருவிக்கப்பட்ட பேய்வாய் பீரங்கிகளின் உதவியோடு பூலித்தேவரின் கோட்டையில் முதன் முதலாக உடைப்பு ஏற்படுத்தப்பட்டது.

அதற்குப்பின் ஆங்கிலேயப் படை, தளவாடங்களோடு கோட்டைக்குள் புகுந்தது. இந்நிலையில் வேறு வழியின்றி எஞ்சிய படைகளோடு பூலித்தேவர் கடலாடிக்குத் தந்திரமாகத் தப்பிச் சென்றார். அவர் கோட்டையை விட்டு சென்றாலும் ரகசியமாக படைகளைத் திரட்டும் பணியில் ஈடுபட்டார். சில மாதங்களுக்குப் பின்னர் பூலித்தேவரால் மீண்டும் கோட்டையைப் பிடித்து பாளையத்தைச் சீர்படுத்தினார்.

ஆனால் இதையறிந்த ஆங்கிலேயர் நெற்கட்டான் செவ்வல் பாளையத்தின் மன்னர் பூலித்தேவரைப் பிடிக்க ஒரு நாட்டையே வளைக்கக் கூடிய அளவுக்குப் பெரும் படையுடன் வந்தனர், இத்தகைய பெரும்படையை எதிர்பார்க்காத நிலையிலும் பூலித்தேவர் நிலைத்து நின்று போரைத் தொடர்ந்தார். ஆனால் ஆங்கிலேயப் படை பீரங்கிகளின் முன் மன்னர் படையின் வாளும் வேலும் தாக்குப்பிடிக்க முடியவில்லை.அச்சமயம் பெய்த பலத்த மழையைப் பயன்படுத்தி மன்னர் தப்பிச் சென்றார். 1767 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தப் போரே மன்னரின் கடைசிப்போர்.


மறைவு நாள் (10-08-1767)

பூலித்தேவரின் மறைவு பற்றி இரு வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. 

ஒரு சாரார் கருத்துப்படி ஆரணிக் கோட்டையின் தலைவன் அனந்த நாராயணன் என்பவனின் மாளிகைக்கு பூலித்தேவரை வரச் செய்து அங்கு கைது செய்யப்பட்டார் என்றும், பாளையங்கோட்டைக்குக் கொண்டு செல்லும் வழியில், சங்கரன் கோயிலின் இறைவனை வழிபட வேண்டும் என்று பூலித்தேவர் விரும்பியதாகவும், அதன்படி கும்பினியப் போர் வீரர்கள் புடைசூழச் சென்று இறைவனை வழிபட்டதாகவும் , அப்போது பெரிய புகை மண்டலமும் சோதியும் கைவிலங்குகள் அறுந்து விழ சோதியில் கலந்தார் என்றும், பூலித்தேவன் சிவஞானத்துடன் ஐக்கியமானதால் "பூலி

சிவஞானம்" ஆனார் என்றும் நாட்டுப்புறப் பாடல்கள் கூறுகின்றன.

மற்றொரு கருத்து பூலித்தேவர் ஆங்கிலேயரால் கைதுசெய்யப்பட்டு தூக்கிலிட்ட செய்தியை மக்கள் அறிந்தால் அவர்கள் கிளர்ச்சி செய்யக்கூடும் என்பதால் ஆங்கிலேயர் இதனை ரகசியமாகச் செய்திருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.

தமிழ்நாடு அரசு திருநெல்வேலி மாவட்டம் சிவகிரி வட்டம் பகுதியிலுள்ள நெல்கட்டும்செவல் எனும் ஊரில் பூலித்தேவன் நினைவைப் போற்றும் வகையில் பூலித்தேவன் நினைவு மாளிகை, திருமண மண்டபம் ஆகியவற்றை அமைத்துள்ளது. இந்த நினைவு மாளிகையின் முகப்பில் பூலித்தேவன் முழு அளவு திருஉருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு ஆயிரம் பேர் அமரக்கூடிய அளவில் திருமண மண்டபம் கட்டப்பட்டுள்ளது. பூலித்தேவன் காலத்து நினைவுச் சின்னங்கள் மற்றும் ஆயுதங்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆராயப்படாத வாழ்க்கை – திருக்குறள் மக்களுக்கு வழங்கும் பாடம்

  மனித வாழ்க்கையின் குறிக்கோள் என்ன? நம்முடைய வாழ்வு எதற்காக? வாழ்க்கையை நாம் எப்படி நடத்த வேண்டும்? இவை எல்லாம் யுகங்களாக மனிதர்கள் ஆராய்ந...